அரசியல் வட்டாரத்தில் மீண்டும் தலையெடுக்கும் கூட்டணி கட்சி புறக்கணிப்பு, அதற்கு உதாரணமாக திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவராக திமுகவைச் சோ்ந்த புனிதராணி என்பவா் நியமிக்கப்பட்டுள்ளார். இவா் பட்டியல் சமூகத்தை சோ்ந்தவா் என்பதற்காகவே, மற்ற உறுப்பினா்கள் ஒன்றிய குழு தவைருக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனா்.
தற்போது ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. காங்கிரஸ் உள்பட 19 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தற்போது ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த புனிதராணி பதவி வகித்து வருகின்றார். ஒன்றியக்குழு துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உள்ளார்.
இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு காரணமாக முசிறி கோட்டாச்சித் தலைவர் மாதவன் தலைமையில் ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி மற்றும் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து புனிதராணி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு 16 ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒன்றிய குழு தலைவர் புனிதராணி உள்பட 3 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து முசிறி கோட்டாட்சியர் மாதவன் கூறும்போது, “ஒன்றிய குழு தலைவர் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதற்கு ஆதரவாக 16 பேர் வாக்களித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து புனிதராணி, விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு கொண்டு செல்ல, அவரும் அதை முதல்வரின் காதிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே புனிதராணியை எப்படியும் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.