Skip to main content

திமுக கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்; இரவில் நடந்த பயங்கரம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 youth who tried to steal from the DMK councilor house was arrested and handed over police

ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி நகர், பி.பி.கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை, பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை அவரது வீட்டில் பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.

வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட ஜெகதீசன் இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் தகவல் தெரிவித்தார். அந்தப் பகுதி மக்கள் ஒன்று கூடி அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் வீட்டிலிருந்து ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அந்த நபரை ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த குமார் (33) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்