தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (27-01-24) இரவு சென்னையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளார். இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்கிறார். பின்பு அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன் பிறகு ஸ்பெயின் செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஸ்பெயின் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புகிறேன். அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற்றது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்கு. ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடு செய்ய தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை அங்கு எடுத்துரைக்க உள்ளேன்” என்று கூறினார்.