Skip to main content

படிக்க முடியாததால் என்ஜினீயரிங் மாணவி எடுத்த விபரீத முடிவு; போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Unable to study, engineering student's tragic decision in chennai

 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ் பெனிட்டா (21). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பிரிவில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (24-11-23) சரோஜ் பெனிட்டா வகுப்பிற்குச் செல்லாமல் அறையிலேயே தங்கியிருந்தாகக் கூறப்படுகிறது. அதன்பின், வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த சக மாணவிகள், பெனிட்டா தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டியுள்ளனர். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாணவிகள், விடுதி காப்பாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

 

அதன் பேரில், அங்கு வந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்கள், மாணவி பெனிட்டா தூக்கில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெனிட்டாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரோஜ் பெனிட்டா 11 தேர்வுகளில் தோல்வி அடைந்ததாகவும், படித்து தேர்ச்சி பெற முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாலும் அவர் தற்கொலை செய்திருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் பெனிட்டா தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர். அதில் பெனிட்டா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது பெற்றோருக்கு தான் கைப்பட எழுதியிருந்த கடிதத்தை மீட்டனர். 

 

அந்தக் கடிதத்தில், ‘எனக்கு விருப்பம் இல்லாத படிப்பில் என்னை சேர்த்துவிட்டீர்கள். நான் சென்று வருகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்