![Ulundurpet young woman's incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/L7jMkQ9hnzd72uGQzsW6AFY9s8EbwoesooH_Vl_9Zmg/1602320063/sites/default/files/inline-images/vkkvkv.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா அதையூர் கிராமத்தை சேர்ந்த செக்கடியான் மகன் பூச்சந்திரன் என்பவர் துபாயில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷார்ஜாவில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார்.
மேற்படி பூச்சந்திரன் விபத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நடத்துவதற்கு துபாயில் தங்கியுள்ள அவர் சகோதரர் பரசுராமன் என்பவருக்கு பூச்சந்திரன் மனைவி பொது அதிகார ஆவணம் ஒன்று (power of attorney ) சமர்ப்பித்தார். ஆவணம் தலைமைச் செயலகத்தில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தின் மூலம் உண்மை தன்மை அறிய, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அதே மாதத்தில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உண்மை தன்மை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சியத்தினால் 11 மாதங்களாக மேற்படி கோப்பு நிலுலவையிலேயே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் வருவாய்க்கு வழி இல்லாமல் கஷ்டப்படும் இந்த குடும்பத்தை பார்த்த பிறகாவது உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மனமிறங்கி அந்த கோப்பினை சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பெண் கூறும்போது, இந்த கோப்பு தொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் முறையிட்டு உள்ளேன். வட்டாட்சியரிடம் கடந்த மார்ச் மாதம் முறையிட்டு அவரும் மேற்படி குடும்ப உறுப்பினர்களை விசாரணை செய்தார். ஆனால் அதன் பின்னரும் அந்த கோப்பில் கையொப்பமிட்டு அனுப்பாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என கண்ணீர் வடித்தார் அப்பெண்.