சிதம்பரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து கூலி வேலைக்கு சென்ற இரு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு அருகே உள்ள சேந்திரகிள்ளை கிராமத்தில் இருந்து சிதம்பரம் அருகே உள்ள அகரநல்லூர் கிராமத்திற்கு விவசாய கூலி வேலைக்கு 16 பெண்கள் உள்ளிட்ட 22 பேருக்கு மேற்பட்டவர்கள் லோடு ஆட்டோவில் சனிக்கிழமை காலை பயணம் செய்துள்ளனர். வாகனம் சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்த போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. வாகனம் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே காசியம்மாள்(55) விவசாய கூலி தொழிலாளி உயிர் இழந்துள்ளார்.
விபத்தை கண்ட அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா முத்தை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா(52) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காலை நேரத்தில் இந்த கிராமத்தில் இருந்து பேருந்து போக்குவரத்து குறைவாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இது போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் சேந்திரகிள்ளை பகுதியில் இருந்து அகரநல்லூருக்கு சென்றுவர ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் ரூ.50 ஆகிறது. எங்களுக்கு கிடைக்கும் கூலியே ரூ200 தான் அதனால் தான் நாங்க இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு லோடு ஆட்டோவை ரூ.400 க்கு அமர்த்தி கொண்டு பயணம் செய்தோம். இப்படி கவிழ்ந்து விபத்துகுள்ளாகி உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்கிறார் கூலிவேலைக்கு சென்ற அரும்பு என்ற பெண்.