
மதுரையில் குற்றச்செயல்களை தடுக்கவும் ரவுடி கும்பல்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து செல்ல வசதியாக காவல்துறையினருக்கு இருசக்கர வாகனங்கள் மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா துவக்கி வைத்தார்.
மதுரையில் பழிக்குப்பழி சம்பவமாக கொலை மற்றும் வெட்டு குத்து சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயுதம் ஏந்திய போலீஸார் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உடனடியாக செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்களை மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், “நகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை குறைக்கவும் ஆயுதம் ஏந்திய போலீசார் நகர் முழுவதும் சென்று வருவதற்கு ஏதுவாக 67 இருசக்கர வாகனங்கள் பணியை மேற்கொள்ள உள்ளன. மக்களின் பார்வையில் படும் வண்ணம் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதுகாப்பான முறையில் ஆயுதப் பிரயோகம் செய்யவும், தாமதமின்றி உரிய இடங்களுக்கு உடனடியாக செல்லவும் ரோந்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கை பராமரிப்பதற்கு பேருதவியாக இருக்கும். நகருக்குள் அமைதியை நிலைநாட்டும் வண்ணமாக ரோந்து காவலர்களின் பணி இருக்கும்” என அவர் தெரிவித்தார்.