சேலத்தில் வழிப்பறி ரவுடியை காவல்துறையினர் எட்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவருடன் மேலும் ஒரு ரவுடி நான்காவது முறையாக இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சேலம் சின்னேரி வயல்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் பாண்டியன் (36). சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே வடக்கு தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சல் என்கிற கச்சா (28). இவர்கள் இருவரையும் சேலம் மாநகர காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூரமங்கலம் மேற்கு ரயில்வே காலனியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் நகைகளைத் திருடியது, அதே வாரத்தில், தில்லை நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் நகைகளைத் திருடியது ஆகிய சம்பவங்கள் தொடர்பாக பாண்டியன் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்கள் நடந்த சில நாள்களில் அதாவது, 21.11.2020ம் தேதி, பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரிடம் பாண்டியன் கத்தி முனையில் 1500 ரூபாய் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாளும் திருவாக்கவுண்டனூர் அருகே ஒருவரிடம் கத்திமுனையில் 2 பவுன் நகைகளைப் பறித்துள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் பாண்டியனை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
அதேபோல், மற்றொரு ரவுடியான அப்சல் என்கிற கச்சா சேலம் மிலிட்டரி சாலையில் கசாப்புக்கடைக்காரரிடம் மிரட்டி மாமூல் கேட்டு தகராறு செய்ததாக அம்மாபேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அவர், பிணையில் வெளியே வந்தார்.
அதன்பிறகும் அவர், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தது, கத்தி முனையில் பணம் பறித்தது, டீக்கடைக்குள் புகுந்து பணம் கொள்ளை அடித்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டார். இந்த சம்பவங்களின் பேரில் அப்சல் மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதை அடுத்து ரவுடிகள் பாண்டியன், அப்சல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் ஜன. 12ம் தேதி, குண்டாஸில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டாஸ் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.
இவர்களில் பாண்டியன் 8வது முறையாகவும், அப்சல் 4வது முறையாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.