வாலி பதிப்பகம் சார்பில் கவிஞர் வாலியின் 87வது பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
விழாவுக்கு நல்லிகுப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். திருச்சி நகைச்சுவை மன்ற தலைவர் சொக்கலிங்கம், சோழ மண்டல தமிழலக்கிய கூட்டமைப்பு கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். வாலி பதிப்பக செயல் இயக்குநர் பாரதி சங்கர் வரவேற்றார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருக்கு வாலி பதிப்பக சார்பில் ரூபாய் 50,000 பொற்கிழி பாராட்டு பத்திரம் அடங்கிய கவிஞர் வாலி விருதுகளை பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகர் சார்லி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.
திரைப்பட ஆய்வாளர் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் தொகுத்த கவிஞர் வாலி திரையிசை பாடல்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. கும்பகோணம் முரளி ஆர்ட்ஸ் கிருஷ்ணசாமி வாலியின் உருவபடத்தை திறந்து வைத்தார். கவிஞர் வாலியின் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
விழாவில் நல்லிகுப்புசாமி பேசுகையில் பழங்காலம் முதல் தற்போதைய நவீன காலத்துக்கேற்ற பாடல்களையும் எழுதி, 4 தலைமுறை ரசிகர்களை கட்டுக்குள் வை்திருந்தவர் கவிஞர் வாரி என்றார்.
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஏற்புரை ஆற்றி பேசுகையில், காலம் பொன் போன்றது அல்ல. உயிர் போன்றது, உயிரையும் காலத்தையும் வாங்கவே முடியாது. காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டியது அவசியம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க தமிழர்கள் ஒருங்கிணைந்து உருவாக்க உறுதியேற்க வேண்டும் நாம் ஒன்றுபட்டு நின்றால் தான் வெற்றி பெற முடியும் நாட்டில் டாஸ்மார்க் வியாபாராம் தான் நன்றாக இருக்கிறது. அதனால் குடிபழக்கம் உடையவர்கள் அந்த பழக்கத்தை கை விட்டால் தான் நாடும், வீடும் நன்றாக இருக்கும்.
கவிஞர் காசி ஆனந்தன் ஏற்புரையில் வரலாற்றில் நிலையாக இயக்கும் இலக்கியவாதி கவிஞர் வாலி, அவரது பார்வையில் யாரிடமும் காணாத புதுமை புதைந்திருக்கும், அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் புதிய இலக்கிய சிந்தனை பரவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு கவிஞர்கள் கல்யாணசுந்தரம், வாலி போன்றவர்கள் தான் காரணம் என்றார்.
நடிகர் சார்லி பேசுகையில், உள்ளமும் புறமும் ஒன்றாக இருந்தவர் வாலி, தான் பெற்ற ஞானம் சாமானியருக்கும் சென்று சேர வேண்டும், என்ற ஆதங்கத்தை கொண்டவர் வாலி, கடைசிவரை அவரிடம் தெளிவு இருந்தது. காலம் உள்ள வரை வாலியின் புகழ் நிலைத்திருக்கும் என்றார்.
பேராசியர் ஞானசம்பந்தன் பேசுகையில், தான் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார். எம்.ஜி.ஆர்.ஐயே மயங்க வைத்த புகழுக்குரியவர், ஈரத்தமிழை உள் வாங்கி தலைமுறை தாண்டி பாட்டு எழுதி அனைத்து தரப்பினரையும் ஈர்த்த பெருமைக்குரியவர்.
விழாவில் திரைப்பட பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா, பொள்ளாட்சி பி.ஏ.கல்வி நிறுவனங்கள்களின் தலைவர் அப்புக்குட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.