நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான தொகுதி வரையறை வெளியிடப்படாவிட்டாலும், சங்கரன்கோவில் தொகுதியும் தென்காசியுடன் இணைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாக, தென்காசியை தொடர்ந்து நேர் வரிசையிலிருக்கும் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வளமான பகுதிகள். முப்போகம் விளைச்சலைக் கொண்டது.
ஆனால் சுமார் 42 கி.மீ சுற்றளவு கொண்ட சங்கரன்கோவில் தொகுதி 100 சதம் வானத்து மழையை மட்டுமே நம்பியுள்ள மானாவரிப் பகுதிகள். இதனால் நலத்திட்டம், விவசாய நிவாரணம் பெற இயலாமல் போய் விடும் என்று தொகுதியில் அடங்கியுள்ள மூன்று கிராம விவசாயிகள், பொது மக்கள் எதிர்ப்புக் குரலை கொடுத்து வருகின்றார்கள். சங்கரன்கோவில், நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்டக் கலெக்டர் மூலமாக கோரிக்கையும் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான நிலவரங்களை ஏற்கனவே நக்கீரன் இணைய தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
தற்போது மாவட்டம் பிரிப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களைக் கேட்பதற்காக வரும் 17ம் தேதி வருவாய் துறையின் இயக்குனர் சத்ய கோபால் வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சங்கரன்கோவிலில் வரும் கலிங்கப்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட வைகோவின் கிராமம் அடங்கியுள்ள திருவேங்கடம் தாலுகா முழுவதும், நீர் ஆதாரமின்றி மானாவரிக் காடுகள் என்பதை அறிவார். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த வைகோ, விவசாயிகளின் துயரங்களைத் துல்லியமாக அறிந்தவர்.
கடந்த ஒரு வருடமாக வறட்சி நிவாரணம் பெற முடியாமலும், கட்டிய பயிர் பாதுகாப்பு காப்பீட்டுத் தொகை கூடக் கிடைக்க வழியின்றி தவிக்கும். தன் பகுதியின் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் நிலைப்பாட்டை அரசின் உயர் மட்டம் வரை கொண்டு போயிருக்கிறார். மேலும் நெல்லை மாவட்டத்திலேயே சங்கரன்கோவில் தொடர வேண்டும், தென்காசியுடன் இணைப்பு கூடாது என்கிற அஜண்டாவை அனைத்து அதிகாரிகள், அரசுக்கும் கோரிக்கையாகவே அனுப்பியிருக்கிறார்.
இந்தச் சூழலில் விவகாரம், சங்கரன்கோவில் தொகுதி மக்களிடையே விஸ்வரூபம் எடுப்பதால் குரல் கொடுப்பதற்காக களமிறங்கியிருக்கிறாராம் வைகோ என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் எதிரொலியாக வரும் 19ம் தேதி சங்கரன்கோவிலில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் வைகோ தலைமையில் நடக்க உள்ளது என்கிற தகவலை கூறுகிறார் நகர ம.தி.மு.க.செயலாளரான ஆறுமுகச்சாமி.