திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த பட்டறை சுரேஷ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுரேஷை தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வந்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரியை சேர்ந்த விஜய் (26) என்பவர், கடந்த வாரம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த பொன்மலை பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (40) அவரது நண்பர் செந்தில் (எ) காஞ்சிபுரம் செந்தில் (30) ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரை பதிவு செய்த துவாக்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன், பொன்மலை பட்டியில் வீட்டில் இருந்த பட்டறை சுரேஷ் மற்றும் காஞ்சிபுரம் செந்திலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி பட்டறை சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பட்டறை சுரேஷ் ஐ.ஜே.கே. கட்சியை சேர்ந்தவர் என்பதும், கடந்த தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தபோது கணக்கு வழக்கு பிரச்சனையில் அது அடிதடியாகி ஒரு கொலை வழக்காக மாறியது குறிப்பிடத்தக்கது.