சேலத்தில், புதிய அரசு சட்டக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 19, 2019) திறந்து வைத்தார். தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் சேலம், திண்டிவனத்தில் இரண்டு தனியார் சட்டக்கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் போதிய அளவு மாணவ, மாணவிகள் சேர்க்க இயலாத காரணத்தால் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது.
இதையடுத்து, சேலம் மணியனூரில் அரசுப்பள்ளிக் கட்டடத்தில் தற்காலிகமாக அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படுவதற்கான உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இக்கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) மாலையில் திறந்து வைத்தார். நடப்புக்கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு சேர்க்கையையும் தொடங்கி வைத்த அவர், விழா மேடையிலேயே 15 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் சட்டக்கல்வியை ஏழை எளிய குடும்பத்தினர் பெறும் வகையில் நடப்பு ஆண்டில் சேலம், நாமக்கல், தேனி ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இக்கல்லூரிகளின் உள்கட்டமைப்புக்காக 9.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று நீதித்துறையில் மின் ஆளுமைமுறை தொடங்கப்பட்டு, மின்னணு முத்திரைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக, 1188 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சேலம் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 948 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதிய சட்டக்கல்லூரிக்கான கட்டடம் இந்த ஆண்டிலேயே கட்டப்படும். எதை சொல்கிறோமோ அதை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த நகரத்திலும் இல்லாத வகையில், அதிக மேம்பாலங்கள் சேலத்தில் கட்டப்பட்டு உள்ளன.
சீலநாய்க்கன்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதல்முறையாக மிக பிரம்மாண்டமான முறையில், சேலம் அரபிக்கல்லூரி அருகில் 66 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் அளவிற்கு சேலம் மாநகரத்தை மாற்றிக்காட்டும் அளவுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சட்டத்துறை செயலர் ரவிக்குமார், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சேலம் அரசு சட்டக்கல்லூரி முதல்வராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த புதிய கல்லூரியில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 பேரும், ஐந்து ஆண்டுகள் சட்டக்கல்விக்கு 160 பேரும் கலந்தாய்வு மூலம் சேர இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.