ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் சமூக செயல்பாட்டாளர் முகிலன். இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசால் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஆவணப்படமாக்கி அதை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்பு பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிட்டுவிட்டு அன்று இரவு மதுரை செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பிறகு காணாமல் போனார்.
முகிலன் ஆலை அதிபர்களால் கூலிப்படை வைத்து கடத்தப்பட்டிருப்பார் அல்லது கொல்லப்பட்டிருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், முகிலனை கண்டுபிடிக்க கோரி மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்தது. தொடர்ந்து நான்கு மாதங்களைக் கடந்தும் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இன்று மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது விசாரணை அமைப்பான சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதைப்பார்த்த நீதிபதி மீண்டும் இம்மனு மீதான விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக கூறினார். முகிலன் தரப்பு வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கால நீடிப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க அதற்கு நீதிபதி "சிபிசிஐடி விசாரணை புதிய கோணத்தில் நடந்து வருகிறது" ஆகவே இந்த விசாரணையை மேலும் எட்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக கூறினார். ஆக முகிலன் பற்றிய விவகாரம் மேலும் இரண்டு மாதங்கள் கூடுகிறது... இதற்கு முன்பு சென்ற முறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போதும் ஒரு சீலிட்ட கவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.