
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வருமானம் ஈட்டுவதற்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த 1974ஆம் ஆண்டு தாட்கோ (TAHDCO - தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம்) ஆரம்பிக்கப்பட்டது. இந்த இந்நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை மற்றும் சுய வேலைவாய்ப்புக்காகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதன் தலைவராக உ. மதிவானண் என்பவர் கடந்த 2 வருடங்களாகப் பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த திமுக இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் இளையராஜா என்பவரை தாட்கோ தலைவராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க. லட்சுமி பிரியா சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “தாட்கோ நிறுவனம் 1974ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.
தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் உத்தரவுப்படி தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) தலைவராக இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.