வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அகரம் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பன்பட்டி கிராமத்தில் மே மாதத்தில் காளியம்மன் மற்றும் கங்கை அம்மன் திருவிழா நடைபெறும். அதேபோல, ஆடி மாத இறுதியில் முனீஸ்வரன் திருவிழா நடைபெறும். இந்த பகுதியில் ஒரே சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுமார் பத்து குடும்பங்கள் உள்ளன. ஊருக்குள் 250 குடும்பங்கள் உள்ளன. திருவிழாக்களின், போது கரகங்கள் மற்றும் தேரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பத்து குடும்பங்களின் வீடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஊருக்குள் உள்ள தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எதிர் தரப்பு, கடந்த ஆடி மாதம் நடைபெறவிருந்த திருவிழாவை வருவாய்த் துறையினருக்கு தெரியப்படுத்தி நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அணைக்கட்டு வட்டாட்சியர் தலைமையில் மூன்று முறை பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் சுமுக தீர்வு எடுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் இரு கோஷ்டியினர் இடையே சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பூசாரியின் கருத்தைக் கோட்டாட்சியர் கேட்டுள்ளார்.
அப்போது பூசாரி,"கடந்த சில வருடங்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளுக்கும் தேர் மற்றும் சிரசு சென்று வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், முனியப்பன் கோவில் ஊருக்குள் இருக்கும் மக்களுக்கான குலதெய்வம் மட்டுமே. அதோடு முனியப்பன் எல்லை சாமி என்பதால் எல்லையைத் தாண்டி செல்லக்கூடாது என்பது ஊர் வழக்கம்" எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டுக் கொண்ட கோட்டாட்சியர்,"சாமி என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். அதனால் அனைவரும் சேர்ந்து வழிபடுங்கள்” என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கீழே வந்த இரு கோஸ்டியினரும், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக மோதிக்கொண்டனர். அந்த சமயத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் ஒருவரும் இல்லாத நிலையில் இரு கோஷ்டியும் வளாகத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அங்கே அவர்களை விலக்கி விடவும், எச்சரித்து வெளியே அனுப்பவும் காவல்துறையினர் யாரும் இல்லாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு வருவாய்த்துறை அலுவலர்கள், அவர்களை சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனிடையே, சமாதான பேச்சுவார்த்தையையொட்டி காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை என்று வேலூர் கோட்டாட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.