கோப்புப்படம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி திமுகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற இந்துக்கள் பண்டிகைகளில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் திமுக சார்பில் வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம். ஆனால் முதலமைச்சராக ஆன பிறகு இந்துக்களை மட்டுமே புறக்கணிக்கிறீர்கள். வாழ்த்து சொல்லத் தவறுகிறீர்கள். அவர்களுடைய பாதையிலேயே தற்போது தமிழக வெற்றிக் கழகமும் பயணிக்கிறது.
ஜோசப் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று தொடங்கிவிட்டு நீங்கள் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. திமுக உடைய ஊதுகுழல் தான் நீங்கள். நீங்கள் திமுகவின் இன்னொரு சி டீம்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் விஜய்யின் கட்சிப் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, ''ஜோசப் விஜய் கட்சி ஆரம்பிக்கும் பொழுது நாங்கள் வரவேற்றோம். அவருடைய கொடியை வரவேற்றோம். வாகை பூ இருந்தது, மஞ்சள் குங்கும வண்ணம், அவர் கொடியில் இரட்டை பிள்ளையார் இருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் வரவேற்கிறோம். அம்மா, அப்பாவை கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார். அதையும் வரவேற்கிறோம். எல்லாருக்கும் பொது என கட்சியை ஆரம்பித்துவிட்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது நியாயமா? ''என்று கேள்வி எழுப்பினார்.