கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி 3வது குறுக்குத் தெருவில் குடியிருந்து வருபவர் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரியன் என்ற ஆண் மற்றும் ஆரிகா ஸ்ரீ என்ற பெண் என இரட்டைக் குழந்தை பிறந்துள்ளன. மதுரையில் இருந்த இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கோவைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக மதுரையிலிருந்து ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தியையும் உடன் அழைத்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், 21ஆம் தேதி இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது சாந்தி, குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளர்.
இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது. பெண் குழந்தையைத் தேடியபோது அந்தக் குழந்தை வீட்டில் உள்ள கழிப்பறைக்குள் அமுக்கி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அக்குழந்தையை மீட்டு படுத்துக்கொண்டிருந்த ஆண் குழந்தையை தூக்கச் சென்றபோது, அக்குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதற்குள் பாட்டி சாந்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த ஆண் குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேரக்குழந்தையைக் கொன்றுவிட்டு பேத்தியை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடிய பாட்டி சாந்தி, பல ஆண்டுகளாக மனரீதியான பாதிப்போடு இருந்துவந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய சாந்தியை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட சாந்தியின் கணவர், மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மற்றும் மதுரை பகுதியில் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று (25.10.2021) காலை மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் சாந்தி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் அவரை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ‘அன்று தனது மகள் மருந்து கடைக்குச் சென்றதுவரை மட்டுமே தனக்கு ஞாபகம் இருப்பதாகவும், அதன் பிறகு தனது மகள் வந்து தன்னை அடித்ததற்குப் பிறகே மறுபடியும் ஞாபகம் வந்ததாகவும், இடையில் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை’ என்று வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.