தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசியிருந்தார்.
இதனிடையே கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி பணிகள் குறித்து கேட்டு வருகிறார். முன்னதாக மாநாடு முடிந்து செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பொதுச்செயலாளர் அனந்துக்கு ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறு விஜய் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுப்பது, உட்கட்சி பணிகள் ஆகியவை நடந்து வந்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் கட்சியில் 100 முதல் 110 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கவுள்ளதாக கட்சியின் தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த வேலைகள் முடிவு பெறாமல் இருப்பது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அதனால் இந்த மாதத்திற்குள் மாவட்ட செயலாளர் நியமன பணியை முடிக்க சொல்லி பொதுச்செயலாளர் ஆனந்திடம் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு அடுத்த மாதம் த.வெ.க. கட்சி அறிவித்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் அதற்குள் இந்த பணிகளை முடித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, பின்பு மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.