சேலத்தில், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள உணவுப்பாதுகாப்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் தொழில் அதிபர்கள் இரண்டு பேர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒரு கிடங்கில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 19) அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர்.
ஆனால் சோதனையின்போது புகையிலைப் பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவசர அவசரமாக புகையிலை பொருள்களை வேறிடத்திற்கு மாற்றி உள்ளனர். என்றாலும், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளோம். வணிகவரித்துறை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து இப்பணிகளைச் செய்து வருகிறோம்.
செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இரண்டு பேர் குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை நீண்ட காலமாகவே பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்து, பல மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புகின்றனர்.
இவ்விருவரின் மீதும் ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. இவர்களுடைய கிடங்கில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. புகையிலை பொருள்களை பதுக்கி வைத்துள்ள இடம் குறித்தும் விசாரித்து வருகின்றோம்,'' என்றனர்.