தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளத்தை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் குளத்தூரை சேர்ந்த சோலைராஜாவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் எதிர்ப்பை மீறி, சோலைராஜாவை 3 மாதங்களுக்கு முன்பு கரம்பிடித்தார் ஜோதி.

பெண்ணை கடத்திவிட்டதாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பையும் அழைத்து பேசிய காவல் துறையினர், இனிமேல் யாரும் பிரச்சனை பண்ணக்கூடாது என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சோலைராஜா-ஜோதி தம்பதி குளத்தூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டது. வீடு வெகுநேரமாக திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த குளத்தூர் போலீஸார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில் ஜோதி, வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததில் ஆத்திரமடைந்த தந்தையும், உறவினர்களும் இந்த கொலையை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சோலைராஜாவின் உறவினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, இந்த கொலைக்கு காரணமானவர் என்று சொல்லப்படும் ஜோதியின் தந்தை அழகர், நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.