சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏ செம்மலை நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
தனது உடல்நலம் கருதாது பல இடங்களில் பிரச்சாரம் செய்து ஜெயலலிதா அமைத்து தந்த இந்த ஆட்சிக்கு எதிராக அவர்கள் (தினகரன் அணியினர்) செயல்படுகிறார்கள் என்று சொன்னால், அது ஜெயலலிதாவுக்கே செய்கிற துரோகம்.
இந்த 18 எம்எல்ஏக்களை வைத்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடலாம் என தினகரன் கருதினார். அது தோல்வியில் முடிந்திருக்கிறது.
இனிமேலாவது இந்த 18 எம்எல்ஏக்களும் இந்த மண் குதிரையை நம்பி ஏமாறாமல் செய்த தவறை மறந்து எங்களுடைய தலைமையிடம் வந்து இணைந்து பணியாற்றினால் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கலாம்.
ஏதோ மக்கள் தன் பக்கம் இருப்பதைப்போல, ஒன்றரை கோடி தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதைப்போல தனது பேச்சால் ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டு தினகரன் எத்தனை காலம் ஏமாற்றுவார்.
தினகரன் சளைக்காமல் பொய்யையே பேசுகிறார். எப்படித்தான் அவரால் முடிகிறது என்று தெரியவில்லை. பொய்யை சர்வசாதாரணமாக பேசுகிறார். என்ன பேசுகிறோம் என்றுகூட யோசிக்காமல் பேசுகிறார்.
நாம் நினைப்பதையெல்லாம் பேசுவதற்கு நாக்கை அனுமதிக்கக்கூடாது. நாம் என்ன நினைக்கிறோமோ, அதை நினைத்து அதில் எதை வெளியிட வேண்டுமோ, எதை பேச வேண்டுமோ அதை மட்டுமே பேச வேண்டும் என்று ஷேக்ஸ்பியர், சாணக்கியர் சொல்லியிருக்கிறார்கள்.
தயவு செய்து இனிமேலாவது தினகரன், உண்மையை பேச வேண்டும். நல்லதை நினைக்க வேண்டும். துரோக சிந்தனையில் ஈடுபடக்கூடாது. அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இறங்கிவர வேண்டும். தன்னைப்போலவே மற்றவர்களையும் அவர் கெடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். இனியாவது அவர் திருந்துவாரா என்று பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.