தென்காசியில் முன்னாள் அமைசசர் இசக்கி சுப்பையா மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஏராளமான அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீன்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இரவு 7.20 மணிக்கு தான் ஆரம்பமானது. இதனால் பிற்பகல் 2 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் சலிப்படைய ஆரம்பித்தனர். இசக்கி சுப்பையா பேசி முடித்ததும் தொண்டர்கள் சாரை சாரையாக கலைய ஆரம்பித்தனர். இதனால் முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் முதல்வர் பழனிசசாமி பேசியதாவது.
இன்று நெல்லை மாவட்டமே அசந்து போகும் நிகழ்ச்சி இது.
அ.தி.மு.க அழிந்து போகும் என்று சிலர் கனவு கண்டார்கள். அதை உடைத்து இன்று இந்த இணைப்பு விழா நடக்கும். நம் இயக்கத்தை சிலர் தி.மு.க.வில் அடகுவைக்க பார்த்தார்கள். நடக்கவில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற வேண்டும். அதுதான் இணைப்பு விழாவின் பரிசு.
ஸ்டாலின் பொய்வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார். அவர்கள் பெற்ற வெற்றி போலியானது. அ.தி.மு.க.வை உடைக்க முயற்சி செய்தார்கள். நடக்கவில்லை. அது நிலைத்து நிற்கும் என்பது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி மூலம் நிரூபணம் ஆனது. ஆட்சி கவிழும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது என்றார்.