நாங்குநேரி இடைத்தேர்தலின் பொருட்டு தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்பரைக்காக வந்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி. ராஜாவும் வந்திருந்தார். பாளை யூனியனுக்குட்பட்ட திருவேங்கடநாதபுரம் மற்றும் கீழப்பாட்டம் ஆகிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களிடம் பேசியதாவது,
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கு நல்ல எழுச்சி மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தி.மு.க. அங்கு வெற்றியடைவது உறுதியாகி விட்டது. தமிழகத்தின் முதல்வர் பெயர் என்ன என்பது பல மக்களுக்கு தெரியவில்லை. எட்டு வருட அ.தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத நிலை இந்த ஆட்சியில் உள்ளது.
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மக்களை கவனிக்கவில்லை என நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் மிகப்பெரிய சவுக்கடி வழங்கினார்கள் அதற்கு பயந்து தமிழகத்திற்கு மோடி வரவே இல்லை. கடைசியாக மோடி வேட்டி கட்டி வந்தார். இந்த இடைதேர்தலால் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியாது. எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்போகிறது. நீட் தேர்வால் டாக்டராக வேண்டிய அனிதா தற்கொலை செய்து கொண்டார். முதல்வருக்கு டாக்டர் பட்டம் தேவையானதா? இதற்கெல்லாம் பாடம் புகட்ட இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய செய்யவேண்டும் என்று பேசினார்.