
குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஏற்றக்கோடை சோ்ந்தவா் கிரிஜா (35). இவரது கணவா் மணிகண்டன் வெளிநாட்டில் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். இதனால் கிரிஜா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த கிரிஜா கணவனின் உறவுக்காரரான ஜான்ரோஸ்(28) கிரிஜா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். மேலும் கிரிஜாவுக்கும் அவருடைய மகள்ளுக்கும் தேவைப்படும் உதவிகளை செய்து வந்துள்ளார் ஜான்ரோஸ். இதை ஓரு கட்டத்தில் ஊரில் உள்ளவா்கள் தப்பாகவும் பேசி வந்தனா். இதனால் ஜான்ரோஸ் கிரிஜாவை திருமணம் செய்ய தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு கிரிஜா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கிரிஜா வீட்டுக்கு சென்ற ஜான்ரோஸ் தன்னை திருமணம் செய்து கொள்ள மீண்டும் கிரிஜாவிடம் வற்புறுத்தியுள்ளார். அப்போது கிரிஜா ஜான்ரோஸை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்ரோஸ் வீட்டின் அருகில் உள்ள ரப்பா் தோட்டத்தில் ரப்பா் பாலை பதப்படுத்த பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து கிரிஜாவின் முகத்தில் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னா் கிரிஜாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஒடி வந்த அக்கம்பக்கத்தினா் கிரிஜாவை காப்பாற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா்.
இதற்கிடையில் தப்பி ஒடிய ஜான்ரோஸ் விஷம் குடித்து விட்டு ரப்பா் தோட்டத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா்.