புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தில் பள்ளி காலத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு படிப்படியாக உயர்ந்து மா.செ. பொறுப்புக்கு வந்தார். சிறு வயதில் மா.செ. ஆனார்.
தொடர்ந்து 2011ம் ஆண்டு அ.தி.மு.க உட்டணியில் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு வருடத்திற்குள் சட்டமன்றத்தில் அதிகமான கேள்விகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற பாராட்டையும் பெற்றார்.
முத்துக்குமரன் எம்.எல்.ஏ. ஆன பிறகும் அரசுப் பேருந்தில் பயணம் செய்து வந்தபோது எடுத்தப்படம்.
புதுக்கோட்டை நகரில் பல ஆண்டுகளாக வீட்டு மனை இன்றி குடியிருந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வாங்கி கொடுத்தார். இப்படி ஏழை மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த முத்துக்குமரன் 2012 ஏப்ரல் 1ந் தேதி புதுக்கோட்டை - அன்னவாசல் சாலையில் காரில் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இவரது இறப்பை மாவட்டம் முழுவதும் துக்க நாளாக அனுசரித்தது.
அதன் பிறகு அவரது பெயரில் மன்றங்கள் உருவாக்கப்பட்டு நற்பணிகள் செய்வதுடன் விளையாட்டு போட்டிகளும் நடத்தி வருகின்றனர். இன்று அவரது நினைவு நாளில் சி.பி.ஐ. மா.செ. மாதவன் உள்ளிட்ட தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.