திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாகத் தெரிகிறது. கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் நடத்தி வருவதுடன் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரியை பார்த்துள்ளனர். இன்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பார்த்தபோது ராஜேஸ்வரி கை கால்கள் வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் பொருட்கள் சிதறிக் கிடந்தது.
இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் ராஜேஸ்வரியின் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வளையப்பட்டியில் இருந்து மகன் மணிகண்டன் வந்த பின்னர் தான் வீட்டிலிருந்த பணம் பொருட்கள் திருட்டு போனதின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.