திருச்சி விமானநிலைய பகுதியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேசும் போது, திருச்சி பாலக்கரை வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அதிமுக பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதேபோல் பொதுமக்களுக்கான இடத்தை அதிமுகவினர் இருவரும் பங்குபோட முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக கலெக்டர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நேருவின் இந்த குற்றச்சாட்டு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது நேரு குறிப்பிட்டது அமைச்சர் தரப்பைதான் என விளக்கமாக கூறுகின்றனர். திருச்சி தில்லைநகர் பகுதியில் மக்கள் மன்றம் முன்புறம் உள்ள இடத்தை தனியாருக்கு வாடகைக்கு விட தில்லைநகர் கூட்டுறவு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காரணம் சங்க தலைவராக உள்ள அதிமுக பகுதி செயலாளர் கலீல்ரகுமான் தான். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் சேர்ந்து கொண்டு இதற்கான நடவடிக்கை மேற்கொண்டதை கண்டுபிடித்த அதிகாரிகள் தீர்மானத்தை நிறுத்தி வைத்திருக்கின்றனர் என்கின்றனர்.
இதேபோல் சத்திரம் பஸ் ஸ்டாண்ட், தில்லைநகர் என பல்வேறு இடங்களில் அமைச்சரின் ஆட்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதைத்தான் நேரு இவ்வாறு கூறுகிறார் என்கின்றனர் அதிமுகவினர்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதிலளித்தார்.
திருச்சியில் வீட்டு வசதிவாரிய இடத்தை இரண்டு அதிமுகவினர் ஆக்கிரமிப்பு செய்வதாக முன்னாள் அமைச்சர் நேரு திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார். மறைமுகமாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பகுதி செயலாளர் கலீல் ரகுமான் ஆகியோரை குறிப்பிட்டு கே.என். நேரு பேசியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் கேட்டதற்கு பொத்தாம் பொதுவாக நேரு பேசக் கூடாது. யார் எந்த இடத்தை என்ன செய்தார்கள் என்பதனை ஆதாரத்துடன் கூற வேண்டும் என்று டென்ஷனாக கூறினார்.