ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் அகத்திய பரம்பரையில் ஒன்பதாவது முனிவராக தோன்றியவர். இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நடுவப்பட்டி யில் பிறந்தவர். அஷ்டாங்க யோகங்களில் சித்தி பெற்று 10 இடங்களில் பூமிக்குள் 48 நாட்கள் இருந்து தவம் இயற்றி உள்ளார்.
பொதிகை மலை, பழனி மலை, சுருளிமலை, வெள்ளியங்கிரி, நீலகிரி முதலிய மலைப்பகுதிகளில் கடும் தவம் புரிந்தவர் . இவர் பூமிக்குள் தவமியற்றிய இடங்களில் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமடம் ஆகும்.

இத்திருமடம் நடுவில் எண்கோண வடிவில் பத்தடி ஆழம் கொண்ட உள்ள குகை உண்டு.
104 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சற்குரு நாத மகா முனிவர் இக்குகையில் அமர்ந்து மூடு பாறையினால் மூடி 48 நாட்கள் நிர்விகல்ப சமாதி தவமியற்றி எழுந்தருளியுள்ளார்.
இத்தகைய தவ வலிமை உடைய ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் திருமடத்தின் முன்பு முழுமுதற் கடவுளாகிய அருள்மிகு சித்தி விநாயகர் பெருமானை எழுந்தருளச் செய்துள்ளார்கள்.
திருமடம் ஆனது ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரால் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே இடமாகும். ஸ்ரீ சற்குரு நாத அஷ்டாங்க யோகத்தின் மூலம் அஷ்டமாசித்தி பெற்றிருந்தும் சித்துக்களை கற்பனையே என்று கூறியுள்ளார்.

பக்தர்களுக்கு பக்தியே சிறந்தது என்றும் பக்தியின் மூலமே அத்வைத நிலையை அடைய முடியும் எனவும் உபதேசித்து உள்ளார்கள்.
சைவ வழி நெறி நின்று சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய படிகளில் சாதனை புரிய உபதேசித்து உள்ளார்கள். இவர் ஜாதி ,மத, மொழி, இன வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் கொள்கை கொண்டவர்.
திருவானைக்கோவில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். அதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி திங்கள் திருவோண நட்சத்திரத்தில் மகா குருபூஜை முதல் நாள் ஸ்ரீ சற்குரு நாதர் மலர் அலங்காரத்துடன் திருவானைக்காவில் கோவிலைச் சுற்றி திருவீதி உலா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

ஏழை மக்களிடத்தில் மிகுந்த கருணை கொண்டிருந்தார் .1913 ஆம் ஆண்டிலேயே குருபூசை விழாக்களை நடத்தி சமபந்தி விருந்து உண்ண செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து பக்தர்களால் ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ சற்குரு நாதர் சிலகாலம் திருவானைக்காவலில் உள்ள திருமடத்தில் இருந்துவிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு எழுந்தருளி பவானி ஆறு உற்பத்தியாகும் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாது ஏழு நாள் இரவு பகல் தவமியற்றி பிறகு திருக்காந்தல் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மடத்திற்குச் சென்று மகா சீடராகிய ஏகாம்பரர் சுவாமிகளை சந்தித்து விட்டு உதகை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சிலகாலம் தங்கியிருந்தார்.
அப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கும் நகர மக்களுக்கும் சாதி, சமய ,மொழி, இன வேறுபாடின்றி சமபந்தி விருந்து அளித்து வருவதுடன் ஆச்சாரங்களை போதித்து கல்வியறிவை கற்பிக்கவும் செய்து குரு உபதேசம் பெற்று பக்தி கர்ம யோக ஞான சாதனைகளை செய்து பிறவிப்பயன் அடைய உபதேசம் செய்துள்ளார்கள்.

பிறகு தன் பிரதான சீடர்களுடன் அகஸ்திய தவம் புரிந்த பொதிகை மலை சென்று அவன் திரும்பி வருவான் என்று சொல்லி தனது திருமேனியோடு அந்தரத் தியானமாய் மறைந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.
அந்நாளிலிருந்து திருச்சியில் சாதுக்களும், யோக சாதகர்களும், பொதுமக்களும் ஸ்ரீ சத்குரு ராஜயோக திருமடத்திற்கு வந்து வணங்கி தியானம் செய்து வருவது காலம்தொட்டே நடந்து வருகிறது.
திருமட இடமானது சத்குரு பெயரிலேயே பதிவாகி உள்ளது. மடத்தில் சற்குரு படம் வைத்து தீப விளக்கேற்றி பராமரித்து வந்தவர் ரத்த சம்பந்த உறவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட சர்ச்சையினால் இரண்டு அறக்கட்டளை உருவானது.
ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை பதிவு எண் 196/BK4/2010, தலைவராக மாணிக்கம், செயலளராக அய்யாசாமி, துணை செயலாளர்கள் மருதமுத்து, கருணாகரன், பொருளாளர்கள் செல்வகுமார், அறக்கட்டளை உறுப்பினர் இளஞ்செழியன், பரமேஸ்வரன், சுரேஷ் குமார், குமார் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளார்கள்.இவர்கள் சித்திரை திருவோண நட்சத்திரத்தில் குருபூசை விழா நடத்துவார்கள்
ஸ்ரீ சற்குரு சுவாமி ராஜயோக திருமட அறக்கட்டளை பதிவு எண் 497/ BK4/2010 தலைவராக சாமி ஐயா, துணைத் தலைவராக நாகராஜன், செயலராக தினேஷ்குமார், துணைச் செயலராக ராஜமாணிக்கம், பொருளாளராக ராஜகோபால் துணைப் பொருளாளராக சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உள்ளார்கள். இவர்கள் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் குருபூசை விழா நடத்துவார்கள்.
மடத்தினுள் சித்தி விநாயகர் திருக்கோவில் மடப்பள்ளி சற்குரு நாதர் தியான மண்டபம் அமைந்துள்ளது. மடத்திற்குள்ளேயே இரண்டு அறக்கட்டளைக்கான அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாண்டு குன்னூர், ஊட்டி, வெள்ளனூர், லால்குடி, நாக நல்லூர், அம்மம்பாளையம், துறையூர், கோயம்புத்தூர் ,மதுரை, தேனி, ஆத்தூர், தர்மபுரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்ட சற்குரு பக்தர்கள் திருமடத்திற்கு வந்து குருபூசை திருவிழாவில் பங்கேற்றார்கள்.

ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை
(பதிவு எண் 196/ BK/4/2010) ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்கம் திருச்சி, கிளை ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்க அறக்கட்டளை குன்னூர், தமிழ்நாடு ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்கங்கள் மற்றும் ஆசிரம கூட்டமைப்பு இணைந்து சித்திரை திங்கள் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீ சற்குரு நாதர் 104 ஆம் ஆண்டு குரு பூஜை திருவிழாவினை 26- 4- 2019 மற்றும் 27- 4 -2019 தேதிகளில் நடத்தியது.
அப்போது திருச்சி கிளை சங்க தலைவர் குரு சுயஞ்ஜோதி சுவாமிகள் ,குன்னூர் ஸ்ரீ சற்குரு சர்வ சமரச சங்க குரு பிரகாஷ் சுவாமிகள், திருச்சி ஸ்ரீ சற்குரு ராஜயோக திருமட அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமையிலும் திருச்சி மடத்தில் சற்குரு, சிஷ்ய வாரிசு குரு சுவாமிகள் மற்றும் ராமலிங்க அடிகளார் திருமேனி சிலைகளும் லிங்கமும் வைத்தனர். அப்பொழுது சிலை வைக்கக்கூடாது என ஸ்ரீ சற்குரு சுவாமி ராஜயோக திருமட அறக்கட்டளை செயலர் தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்து சிலையை அப்புறப்படுத்தினார். இதனால் சற்குரு மடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் 24- 5 - 2019 அன்று தினேஷ்குமார் குழுவினர் 104 ஆம் ஆண்டு குருபூசை தின விழாவை நடத்துகிறார்.
மிக நீண்ட பாரம்பரிய மிக்க இந்த சற்குரு நாதர் தியான மண்டபம் நீதிமன்றம், காவல்நிலையத்தில் புகார் என தற்போது பெரிய பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த சர்ச்சரவுக்ளுக்கு இடையே குருபூசைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.