கார் முதல் குண்டூசி வரை, கடுகு முதல் காய்கறிகள் வரை இப்போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற வெப்சைட்களில் புக் செய்தால், வீடு தேடி வந்து டெலிவரி செய்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் அல்லது ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் பொருளாதார வல்லுநர்களிடமிருந்தே வருகின்றன.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு வரி விதிக்க சொல்லக்காரணம், ஒரு வியாபாரி என்பவர் கடையை வாடகைக்கு பிடிக்க வேண்டும், அதற்கு அட்வான்ஸ் தரவேண்டும், மாதம் தோறும் வாடகை, மின்கட்டணம், தொழில்வரி கட்ட வேண்டும். ஆன்லைன் வியாபாரம் என்பது, வெப்சைட் உருவாக்கி, அதை பராமரித்தால் போதும். கடை வைக்க 100 ரூபாய் செலவாகிறது என்றால், ஆன்லைன் மார்க்கெட் உருவாக்க 30 ரூபாய் இருந்தால் போதுமானது. அதனாலயே இந்த ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்யச்சொல்கிறார்கள் வியாபாரிகள். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சங்கத்தினர், நுகர்பொருள் விநியோக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செந்தில்முருகன் தலைமையில், ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், அதனை அனுமதித்த மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 20ந்தேதி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகம் எதிரே செய்தனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துக்கொண்டனர்.