'கஜா' புயல் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டு மொத்த மரங்களையும் அடியோடு சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதுடன் சோலை வனமாக இருந்த பூமியைப் பாலை வனமாக மாற்றிவிட்டுச் சென்றது.
இந்த நிலையில் தான் கிராமங்களில் இருந்து புறப்பட்ட வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்த இளைஞர்கள் உள்ளூர் இளைஞர்களுடன் கை கோர்த்து முதலில் அந்தந்த கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைச் செய்யத் தொடங்கினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 'கிரீன் நீடா' அமைப்பு பல்வேறு அமைப்புகளையும், தன்னார்வலர்களையும், அரசு அலுவலர்களையும் இணைத்துக் கொண்டு கிராமங்களில் மட்டுமின்றி மன்னார்குடி- நீடாமங்கலம் சாலையில் 13 கி.மீ தூரத்திற்கு மரப் போத்துகளை நட்டு சொந்த செலவில் பராமரித்து வருகின்றனர். மரக்கன்றுகளைவிட வேகமாக மரப் போத்துகள் வளர்ந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறை மூலம் நட்டாலும் பல சாலைகளில் பராமரிப்பு இல்லை. ஆலங்குடி உட்கோட்டத்தில் சாலைப் பணியாளர்களின் துரித சேவையால் வேகமாக வளர்கிறது மரக்கன்றுகள். மற்றொரு பக்கம் இளைஞர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து பல்வேறு தரப்பிலும் உதவிகள் பெற்றும், சொந்தச் செலவிலும் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். இதனால் பல கிராமங்களில் ஏரி, குளங்கள் சீரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தண்ணீர் நிரைந்திருந்தது.
புதுக்கோட்டை- தஞ்சை மாவட்டங்களில் உள்ள நான்கு தாலுக்காக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட 'கைஃபா' என்ற அமைப்பு பல்வேறு தரப்பிலும் உதவிகள் பெற்று பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் கிடந்த பல நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரை நிரப்பியதுடன் கரைகளில் மரக்கன்றுகளையும் நட்டனர்.
அதில் ஒன்று பேராவூரணி பெரிய குளம் எரி. ஏரியைச் சீரமைத்து ஏரிக்குள் 3 குருங்காடுகள் அமைத்து அதில் பலமரக்கன்றுகளையும் நட்டு அதனைப் பராமரிக்க பெண்களையும் நியமித்தனர். ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போது அந்த மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து காடுகளைப் போல காட்சி அளிக்கத் தொடங்கிவிட்டது. இங்கு குருவிகள், பறவைகள் வந்து செல்ல வசதியாக பழ மரக்கன்றுகளும் நடப்பட்டிருப்பதால் பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிட குருவிகள் வந்து செல்கிறது. அந்தப் பறவைகள், குருவிகள் மூலம் இன்னும் நிறைய விதைகள் விதைக்கப்பட்டு மரங்கள் உருவாகும் என்கிறார்கள் கைஃபா அமைப்பினர்.
இதேபோல ஒட்டங்காட்டிரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு சார்பிலும் ஏரி சீரமைக்கப்பட்டு குருங்காடு வளர்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஏரிகளின் நடுவில் குருங்காடுகள் அமைப்பதைக் கிராமங்கள் தோறும் வரிவுபடுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் குடிமராமத்து மூலம் மராமத்து செய்யப்பட்டு வரும் ஏரிகளில் குருங்காடுகள் அமைக்கவும் கிராமத்தினர் திட்டமிட்டுள்ளனர். புயலில் இழந்த மரங்களை மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் களமிறங்கி இருப்பதால் மரங்களும் வேகமாக வளர்கிறது.