புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருச்சி வந்து, அங்கிருந்து புதுக்கோட்டைக்கு காரில் பயணித்தார். விராலிமலையில் ‘ஒயு’ தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுக் காளையின் சிலையைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து விராலிமலைத் தொகுதிக்குள் பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இலுப்பூரில் அமைக்கப்பட்டிருந்த உயரமான கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். பின், அன்னவாசலில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு விராலிமலைத் தொகுதியின் கடைசியில் உள்ள கவிநாடு கன்மாயில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிப்பிற்கு நன்றி கூறும் விதமாக, சுமார் 200 மாட்டு வண்டிகளுடன் திரண்டிருந்த விவசாயிகளைச் சந்தித்தார்.
அங்கு, அவர் மாட்டு வண்டியில் செல்ல பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டி தயாராக இருந்தது. ஆனால், அந்த வண்டியை புறக்கணித்துவிட்டு வரிசையில் நின்ற ஒரு வண்டியில் முதல்வர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் ஏறி நின்ற போது கூட்டம் அதிகமாக நின்று கூச்சல் போட்டதால், வண்டியில் பூட்டிய அந்த காளைகள் வெறித்து வண்டியை உலுக்கியது. அதில், முதல்வர் சிறிது தடுமாறி நின்றார். அதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத் திட்டங்கள் வழங்கி, பணிகளுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்து கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.