திருச்சி மணப்பாறை அருகே கடத்தி செல்லப்பட்ட 2,750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரசியைக் கடத்தி செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் சுஜாதாவின் உத்தரவுப்படி திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சனின் அறிவுறுத்தலின்படி ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன், மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் தனி வருவாய் அலுவலர் மணிமாறன் ஆகியோர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் சாலையில் உள்ள கலிங்கப்பட்டி பிரிவு சாலை அருகே விரைந்து சென்ற போலீசாரை பார்த்தபோது, நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் தப்பித்து ஓடியுள்ளார். இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் சுமார் 55 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே தனி வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தையும், அதில் இருந்த ரேஷன் அரிசியையும் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பித்துச் சென்ற ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.