ரஜினியை பற்றி நாம் விவாதம் செய்யக்கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார். சேலத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தைத் துவக்கி வைக்க வந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் மாநகரில் இந்து முன்னணி சார்பில் 200 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. விழாவின் மூன்றாம் நாளான புதன்கிழமை (செப். 4, 2019) மாலையில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கரைக்கப்பட்டன.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சிலைகள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். முன்னதாக, அவரிடம் பாஜகவின் தமிழக தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவாரா? இல்லையா? என்பது குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ரஜினியைப் பற்றி நாம் விவாதம் செய்யவே கூடாது. என்னைப் பொருத்தவரை அது அநாகரிகமான செயல். அவர் பிரபலமானவர். அவர் எந்த விருப்பமும் சொல்லவில்லை. அகில இந்திய பெரிய கட்சிக்கு யார் தலைவர்? இவர் வருவாரா? அவர் வருவாரா? என சொல்லும் உங்கள் கருத்துகளைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
பிரதமர் மற்றும் அகில இந்திய தலைமை விவாதித்து தமிழகத் தலைவர் யார் என்பதை முடிவு செய்வார்கள். கட்சியின் தலைமை யாரை கைகாட்டுகிறதோ அவரை தலைவராக ஏற்போம். ரஜினி ஒரு சாதாரண நபர் இல்லை. அவரைப்பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டமில்லை. ரஜினி ஒரு பெரிய ஆளுமை. அவர் கருத்து சொல்வதற்கு முன் நாம் பேசுவது அநாகரிகம். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிதம்பரம் கைது குறித்து கேட்டபோது, ''ப.சிதம்பரம் மிகப்பெரிய ஊழல்வாதி என்பதையே 25 ஆண்டு காலமாக நான் சிவகங்கை மாவட்டத்தில் சொல்லி வருகிறேன். ஏனென்றால், அவரைப்பற்றி எனக்கு முழுவதும் தெரியும். 1977ம் ஆண்டிலிருந்து அவரை நான் உன்னிப்பாக அரசியலில் கவனித்து வருகிறேன். நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் எந்த வித காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர். ஆனால் சிதம்பரம், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேசியிருக்கிறார். காங்கிரஸ்காரர்களை ஒன்றரை வருஷம் சிறையில் வைக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்ய மாட்டோம். நாங்கள் ஜனநாயகவாதிகள். உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். ஊழல் செய்தவர்கள் சிறைக்குப் போக வேண்டும்,'' என்றார்.