திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நலப் பெட்டகம் வழங்கி தூய்மை பணியாளர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மூலம் காசநோய் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காசநோய் குறித்த சிறப்பு முகாம் மற்றும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தை காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அமைச்சர் கே என் நேரு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளரும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், திருச்சி பறவைகள் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை பெய்த மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது. மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் விரைவில் நிறைவடையும் எந்த வித குறையும் இன்றி அனைத்து விதமான பணிகளையும் முழுமையாக நிறைவு செய்து திறக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்னதாக பணிகள் நிறைவடையும்” என்றார்.