திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு வாதங்களை வைத்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் அம்பிகாபதி பேசுகையில், "எனது வார்டுக்கு உட்பட்ட ஏர்போர்ட் பசுமை நகர் பகுதியில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. அதேபோன்று எனது வார்டில் பெரும்பாலான பகுதிகளில் பெயர் பலகை இல்லை" என்றார். அதற்கு மேயர் மு.அன்பழகன் பதிலளிக்கையில், "மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
கவுன்சிலர் ஜெயநிர்மலா, "எங்கள் மண்டலத்தின் உதவி ஆணையரை மாற்றுவதாக உறுதி அளித்த மேயருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரிப்பேர் பணிகளுக்காக பேட்டரி வாகனங்களை அனுப்பும்போது மாற்று வாகனங்கள், மாற்று டிரைவர்கள் வழங்கப்பட வேண்டும்" என்றார். அதற்கு மேயர் அன்பழகன், "25 பேட்டரி வாகனங்கள் வந்துள்ளது. 50 டாடா ஏஸ் வாகனங்கள் விரைவில் வர உள்ளது. இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும்போது மாற்று வாகனங்கள் வழங்க ஏற்பாடு செய்ய முடியும்" என்றார். கவுன்சிலர் சுரேஷ், “கோணக்கரை மின் மயானத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு மின்விளக்கு கூட எரியவில்லை” என்றார். கவுன்சிலர் கோவிந்தராஜ், "பால் பண்ணை முதல் துவாக்குடி வரை நெடுஞ்சாலை பகுதியில் சாலைத்தடுப்புகள் அதிகம் வைக்கப்பட்டுள்ளது. இது பகலில் தேவை. இரவு நேரங்களில் இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே இரவு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம், "தெப்பக்குளம் பகுதியில் விடப்பட்ட டெண்டருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. கூட்டத்தில் தீர்மானம் வைத்து டெண்டர் டிஸ்போசல் செய்யப்பட்டதா? என்றார். மேயர் அன்பழகன், "ஏற்கனவே கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு தான் அனைத்தும் நடந்துள்ளது" என்றார். அதற்கு கவுன்சிலர் முத்துச்செல்வம், "எனக்கு டெண்டர் நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை. நாங்கள் கிள்ளு கீரை இல்லை. இந்த டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றார்கள்" என்றார். மேயர், "மூன்று பேர் பங்கேற்றுள்ளனர்" என்றார். முத்துச்செல்வம், "நேற்றைக்கு கேட்கும்போது எத்தனை பேர் என்று தெரியவில்லை என்று கூறினீர்கள்" என்றார். இதற்கிடையே முத்துச்செல்வத்திற்கு ஆதரவாக கவுன்சிலர் காஜாமலை விஜி, லீலா ஆகியோர் பேசினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மேயர், "இனிமேல் டெண்டர் நோட்டீஸ் வழங்கப்படும்" என்றார்.
திமுக கவுன்சிலர் சாதிக், "சிங்காரத்தோப்பு பகுதியில் சாலைகள் குறுகலாக உள்ளது. தொலைத்தொடர்பு கேபிள்கள் அடியில் பதிக்கப்பட்டுள்ளதால் பாதாள சாக்கடை தொட்டிகள் இறக்குவதில் சிக்கல் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்" என்றார். பைஸ் அகமது, "எங்கள் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது எனவே பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்களுடன் கலந்து பேசி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்" என்றார். எல்ஐசி சங்கர், "இபி ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையில் வேகத்தடை எதுவும் அமைக்கப்படவில்லை" என்றார்.
அதிமுக அரவிந்தன், "எனது வார்டு பகுதியில் ஹை மாஸ் விளக்கு பொருத்தப்படவில்லை. இந்த கூட்டத்தில் எந்த பொருளும் எனது பகுதியில் வைக்கவில்லை" என்றார். விசிக கவுன்சிலர் பிரபாகரன், "இரட்டை வாய்க்கால் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை பலமுறை இந்த கூட்டத்தில் கூறி இருக்கின்றேன். அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் கடையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்டு மழைக் காலங்களில் சாக்கடை நீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அஞ்சாமல் இருக்கின்றார்கள்" என்றார். அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன், "துப்புரவு பணியாளர்களை தனியாருக்கு மாற்ற கூடாது" என்று கூறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.