தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள். இந்த நிலையில் தொடர்ச்சியாக 3 நாள் விட்டு விட்டு, அதே நேரத்தில் கடுமையாகவும் மழை பெய்து வருகிறது.
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான காத்திருப்பு அறை உள்ளது. இந்த அறையில் பொதுவாக ஏராளமான பயணிகள் காத்திருப்பார்கள். இந்த நி்லையில் அறையின் மேற்கூரையில் உள்ள பால்சீலிங் தீடீர் என உடைந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து பதறி ஓடினார்கள். இதில் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் மீதும், ஒரு குழந்தை மீதும் சீலிங் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. பின்னர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு அந்த குடும்பத்தினர் பயணத்தை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பெய்த மழையினால் கட்டிடத்தின் ஏற்பட்ட நீர் கசிவால் தெர்மாகோல் அட்டைகள் ஊறி உடைந்து விழுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறை பூட்டப்பட்டு பயணிகளை மற்றோரு அறையில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.