தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், நெல் கொள்முதல் மற்றும் அரசின் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 17 ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் குளிர் கால கூட்டத் தொடர் துவங்கும் நிலையில் புதிய சட்ட மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்ட புதிய முதலீடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்து துறைகளும் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகி இருக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துறைவாரியாக ஒவ்வொரு அமைச்சரிடமும் முதல்வர் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 12 அமைச்சர்களை தனியாக சந்தித்து பேசிய முதல்வர் அவர்களிடம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர்கள் மீது வரும் விமர்சனம் குறித்து பேசிய முதல்வர், வருங்காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.