குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் வருகை தந்துள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகை தந்துள்ளார்.
சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று (5.8.2023) மாலை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ‘திராவிட மாடல்’ என்ற புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்றார். இந்நிகழ்வில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து இன்று காலை சென்னையில் நடைபெற்ற, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மண்டபத்தையும் மகாகவி பாரதியார் உருவப் படத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கு முன்னதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசினை வழங்கினார்.