மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கான புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருந்தது. அதில் ஒப்பந்த பணி சட்டம், வேளாண் உற்பத்தி விலை பொருள் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருள் விற்பனை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றி அதனை செயல்படுத்த தொடங்கிய நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி நகரை முற்றுகையிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு 15 நாட்களாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றனர். ஐந்து கட்டத்திற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தமிழக விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.