திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (16.02.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் நந்தலாலா, அரசு அலுவலர்கள், ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் இன்று சிந்தித்துக் கொண்டிருக்கும் புதை வடிகால் திட்டங்களை நமது முன்னோர்கள் மிகச்சிறப்பாக செயல்படுத்தி சிந்தித்து காட்டியுள்ளனர். இப்படி அநேக நிகழ்வுகளை நாம் நம்முடைய முன்னோர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது ஒரு மொழி. எனவே, ஆங்கிலத்தில் பேசுவது தான் மிகச் சிறந்தது என்று நினைக்கும் மாணவர்களுக்கு மத்தியில் எப்போதும் தமிழில் பேசுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். அது எந்த இடத்திலும் உங்களை குறைவுபடுத்தாது” என்று கூறினார்.