கர்நாடகாவைச் சேர்ந்த மோசடி சீட்டு கம்பெனியிடம் பணத்தை இழந்ததாக சென்னை வியாபாரிகள் சங்கம் சங்க பேரவையை சேர்ந்த சிறு வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் 124 கிளைகள் சென்னையில் மட்டும் 14 கிளைகள் என சுமார் 25 ஆயிரம் சிறு வியாபாரிகளை குறிவைத்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து திரிபுரா சீட் பண்ட் என்ற பெயரில் ஏமாற்றியதாக திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மீது இதுவரை 25 ஆயிரம் புகார்கள் போலீசில் குவிந்துள்ளன.

சென்னை சைதாப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த திரிபுரா சீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் ஆவார். தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 200 க்கு மேற்பட்ட கிளைகளைப் பரப்பி கடைகள் தோறும் சென்று வியாபாரிகளிடம் இருந்து பணத்தை வசூலித்து கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளனர்.


பத்தாயிரம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை என்று தினமும் வசூல் செய்துள்ளனர். 20 மாதங்கள் வசூல் முடிவில் அல்லது தேவைப்படும் நேரத்தில் தள்ளுபடி போக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிகள் இருந்ததால் வியாபாரத்தில் முதலீடு செய்ய இந்த தொகை உதவியாக இருக்கும் என சிறுக சிறுக சேர்த்து வைத்த காசை திரிபுரா சீட்டில் முதலீடு செய்தனர். தற்போது இரண்டு வருடங்களாக தொகை கிடைக்காததால் தவித்து வருகின்றனர் அந்த வியாபாரிகள்.

இதுதொடர்பான மோசடி வழக்கை பதிவு செய்துள்ள சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இது போன்ற ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து உள்ள நிலையில் கிருஷ்ண பிரசாத் மற்றும் அவருடைய மனைவி சுவர்ணா அவரது உதவியாளர் வேணுகோபால். பாலா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். முக்கிய நபரான வாசுவை இதுவரை கைது செய்ய முடியவில்லை.

இந்த வழக்கில் திரிபுரா நிறுவனத்தின் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணம் கட்டிய வியாபாரிகளுக்கு பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என்று உறுதியளித்துவிட்டு இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திரிபுரா சீட்டு நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை முடக்கி பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். 25 ஆயிரம் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்ட 400 கோடி ரூபாய் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கத்தில் வியாபாரிகள் தற்போது தவித்து வருகின்றனர்.