இந்திய மத்திய அரசின் பிரதமராகவுள்ள நரேந்திரமோடி ஆட்சியில், தினம் தினம் பெட்ரோல் விலை உயர்ந்துக்கொண்டே உள்ளது. இன்னும் சில வாரத்தில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலையும் அப்படித்தான் உள்ளது.
பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வட்டார தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளர்களில் ஒருவருமான டி.கே.ராஜா தனது வீட்டில் இருந்து குதிரை வண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார்.
அதுப்பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கவனிக்கும் போது, வருங்காலத்தில் பழங்காலம் முறைப்போல் மாட்டுவண்டியிலும், குதிரை வண்டியிலும் தான் பயணம் செல்ல வேண்டிய நிலை வரும்போல் உள்ளது என்பதை ஆட்சி செய்பவர்களுக்கு தெரியப்படுத்தவே குதிரை வண்டியில் வந்தேன். பணம் இருக்கிறவர்கள் மாட்டுவண்டி, குதிரை வண்டியிலும், பணம்மில்லாதவர்கள் நடந்துப்போக வேண்டிய நிலையே வரும் நிலை ஏறுப்பட்டுள்ளது என்றார்.
டி.கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் தான் என கூட்டத்தில் பேசினர். அதோடு, வந்தியிருந்தவர்கள் மத்திய பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.