திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்காயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்ணிய வாசகம், பஞ்ச கல்ப பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், விஜய ஹோமம், மகா பூர்ண ஹாதி ஹோமம் நடைபெற்றது. மேலும் குரு ஹோரையில் எந்திரம் நவரத்தினம் பஞ்சலோகம் வைத்து அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்ட பந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் தீபாராதனையுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் கலசம் எடுத்து வரப்பட்டு அனைத்து கோபுர கலசங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து மூல தெய்வங்களுக்கும் மகா குடமுழுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை செய்து அருள் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவைக் காண சென்னை, சேலம் போன்ற வெளியூர்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கௌரவத் தலைவர் பழனி ஆண்ட பிள்ளை, துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் சிதம்பரம் ஜோதி, தலைவர் மருதமுத்து பிள்ளை, செயலாளர் ரவிக்குமார், இணை செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.