திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் பழைய ஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்து மத்திய, மாநில அரசுகள் உள்பட பல்வேறு தன்னார்வலர்களும் 80 மணி நேரம் 600 பேர்கள் வரை போராடியும் இறுதியாக துண்டு துண்டுகளாக சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள், பயன்பாட்டில் இல்லாத பழைய ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்பு தொட்டிகளாகவும், பயன்படுத்த முடியாத கிணறுகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சில நாட்களில் ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்.
இந்த நிலையில் தான் சுர்ஜித் பலியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் ஹரியான மாநிலத்தில் ஒரு 5 வயது குழந்தை ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சுர்ஜித் நினைவாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள 'நமது நண்பர்கள்' இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்குவதுடன் சுர்ஜித் நினைவாக மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டனர்.
அந்த நிகழ்ச்சி இன்று அறந்தாங்கி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச்செல்வம், நமது நண்பர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அப்போது மாணவர்கள், "ஆழ்குழாய் கிணறு ஆபத்தானது.. அதன் அருகில் செல்ல மாட்டோம்.. எங்கேனும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதையோ, நிற்பதையோ கண்டால் அவர்களை அவர்களின் வீட்டில் கொண்டு போய் சேர்ப்போம். மூடப்படாத ஆழ்துளைக் கிணறு மற்றும் குழிகளைக் கண்டால் பெரியவர்களிடம் கூறுவோம். பெரியவர்களின் துணை இல்லாமல் ஆறு, குளம், குட்டை, கிணறு பகுதிகளுக்கு செல்லமாட்டோம். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தைவிட்டு செல்லமாட்டோம். அன்புத் தம்பி சுர்ஜித் நினைவாக எங்கள் வீட்டில் ஒரு மரக்கன்று நட்டு வளர்ப்போம்" என்று அறந்தாங்கி, ஆவணத்தான்கோட்டை, வடக்கு, மேற்கு, ராஜேந்திரபுரம், குருந்திரகோட்டை, திருநாளூர், பூவைமாநர் மற்றும் பல கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன் நமது நண்பர்கள் இயக்கம் கொடுத்த விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் மரக்கன்றுகளை பெற்று வீடுகளில் நட்டுள்ளனர்.
இதே போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடவும், சுர்ஜித் நினைவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் திட்டம் உள்ளது என்றனர் நமது நண்பர்கள் குழுவினர்.