புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியில் ஆர்.கே.டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் பணி செய்து வருபவர் ரசாக். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்ற மணிகண்டன் எனக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருந்தால் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஓமன் நாட்டில் வேலை இருப்பதாகவும் விசா மற்றும் விமான டிக்கெட் சேர்த்து 70,000 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று ரசாக் கூறியுள்ளார். மணிகண்டன் அதற்கு 70,000 ரூபாய் கட்டியுள்ளார். மணிகண்டனுக்கு விசா வந்ததையடுத்து, கடந்த டிசம்பர் 2- ஆம் தேதி விசா, அவர் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
ஓமன் நாட்டின் விமான நிலையத்தில் வைத்து மணிகண்டனின் விசா ஆய்வு செய்ததில் தங்களது விசா போலி என்றும், அவரை ஓமன் நாட்டு காவல்துறையினர் இரண்டு நாள் வைத்து விசாரணை செய்துள்ளனர். மணிகண்டனோ கண்ணீர் மல்க நான் கஷ்டப்பட்டு 70,000 ரூபாய் பணத்தை கட்டினேன் என்று கூற அங்குள்ள காவல்துறை, அவரை உடனே இந்திய தூதரகம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்திய தூதரகம், டெல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து, காவல்துறையினர் மணிகண்டனை விசாரணை செய்ததில் எனக்கு அறந்தாங்கியைச் சேர்ந்த ரசாக் என்பவர் தான் விசா கொடுத்தார். அதற்கு நான் 70,000 ரூபாய் செலுத்தினேன் என கூறி அவருடைய முகவரியை கூற உடனே அறந்தாங்கி விரைந்த டெல்லி காவல்துறையினரோ ரசாக்கைத் தூக்கி சென்று சார்பு ஆய்வாளர் தர்மேந்திர குமார் மீனா மற்றும் மனோஜ்குமார் ஓம்பிரகாஷ் மீனா விசாரணை செய்ததில், அந்த விசா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பகுருதீன் என்பவர் தான் தனக்கு வழங்கினார்.
அதை உண்மையான விசா என்று தான் நம்பி மணிகண்டனை அனுப்பி வைத்தேன் என்று கூற, உடனே டெல்லி காவல்துறையினர் கீழக்கரைச் சேர்ந்த அல்ஆபியா டிராவல்ஸ் வந்துள்ளனர். அங்கிருந்த நபில் என்பவரை விசாரணை செய்தனர். அதற்கு நபில் அப்படி ஒரு நபர் இங்கு கிடையாது என்று கூற டெல்லி காவல்துறை அடித்துள்ளனர்.
இதையடுத்து டிராவல்ஸ் ஊழியர்களுக்கு டெல்லி காவல்துறையினருக்கு தகராறு ஏற்பட அங்கிருந்த பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதையடுத்து, கீழக்கரை உடனடியாக அப்பகுதிக்கு வந்த கீழக்கரை காவல்துறையினர் அனைவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையில் விசாரணை செய்ததில் பகுரூதீன் என்பவர் போலியாக விசா வழங்கியது மட்டுமில்லாமல் அல்ஆபியா டிராவல்ஸ் என்ற நிறுவன பெயரை போலியாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. தற்சமயம் தலைமறைவான பகுரூதீனை தேடி வருகின்றனர்.