புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பேயாடிக்கோட்டையிலிருந்து திருவாடனை செல்லும் பாம்பாற்றுபாலம் மற்றும் இணைப்புச் சாலை, சாலைத் தடுப்புகள் நபார்டு நிதி ரூ. 5.70 கோடியில் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அந்த சாலை மற்றும் சாலை தடுப்புகள் 4 மாதத்தில் மோசமாகி வெடித்துள்ளது.
இந்த மோசமான கட்டுமானப் பணிகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான ரகுபதி எம்.எல்.ஏ மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், அறந்தாங்கி மாஜி உதயம் சண்முகம் ஆகியோர் திமுக பிரமுகர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டனர்.
அப்போது மாவட்டப் பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ.. தமிழக முதல்வரால் கடந்த நான்கு மாதத்திற்கு முன் திறக்கபட்ட பாலம் மற்றும் இணைப்புச் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ஆளும் அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கமிசன், கலெக்சன், கரப்சன் என்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு பாலங்களை ஆராய்ந்து முழு அறிக்கைகளை திமுக தலைவரிடம் கொடுக்க உள்ளோம். மேலும் தேவைப்பட்டால் ஆட்சியின் ஊழலைப் பற்றி நீதிமன்றத்தை நாடி எல்லாமே மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிற ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீதிமன்றத்தின் மூலம் திமுக தலைவர் நிருபித்து காண்பிப்பார் என்றார்.
அங்கு நின்ற திமுகவினர் கூறும் போது.. முதல்வர் எடப்பாடி பெரிய வேலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை சிபிஐ விசாரனை செய்ய உள்ளது. அதனால் அவர்களால் முறையற்று நடந்துள்ள பணிகள் பற்றிய விபரங்களை தளபதி வாங்கி வருகிறார். அதில் ஒன்று தான் பேயாடிக்கோட்டை பாலம். இது பற்றி முழு விபரங்களும் வேண்டும் என்று தளபதி கேட்டதால் மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் பார்த்துள்ளனர். இன்று தஞ்சை வரும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுக்கப்படும் இந்த அறிக்கையை வைத்து அவர் மேல் நடடிக்கைக்கு போக தயாராகி உள்ளார் என்றனர்.