தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். நாடு முழுவதிலும் எதிர்ப்பார்க்கப்படும் மக்களவை தேர்தல் தேதியுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியையும் அறிவித்தார்.
சுனில் ஆரோரா பேசியபோது, ‘’17வது மக்களவை தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். வேட்புமனுதாக்கல் நடைபெறும் கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்யப்படும். மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள். இந்த தேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வாக்களிக்கும்போது வேட்பாளர்களின் முகம் தெரியும்’’என்று தெரிவித்தார்.