நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலையின் போது உடன் கொல்லப்பட்டவர் அப்பாவியான பணிப் பெண் மாரியம்மாள். தாய் மற்றும் தந்தையற்ற அனாதைகளாகிப் போன மாரியம்மாளின் மகள்களான ஜோதிலட்சுமி, வீரலட்சுமி, ராஜேஸ்வரி மூன்று பேரும் பாளை சாராள் தக்கர் பள்ளியில் 12, 10, மற்றும் 8- ஆம் வகுப்புகள் படிப்பவர்கள். தனியார் பள்ளியில் படிப்பவர்கள் என்பதால் வயதான அவர்களின் தாத்தா மற்றும் பாட்டி வசந்தாவும், அவர்களின் கல்விக்கு வேண்டிய பணத்தை செலுத்த முடியாமல், வசதியற்ற நிலையில் இருப்பவர்கள். அடிப்படையில் வறுமையான குடும்பம். தாயின் அன்றாட பல வீட்டுக் கூலி வேலை மூலம் படித்து வந்தவர்கள் தற்போது திக்கற்ற பரிதாப நிலை.
இதையறிந்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் முதற்கட்ட உதவியாக அந்தக் குடும்பத்திற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டினார். அதனை தொடர்ந்து அவர்களின் நெருக்கடியான குடும்ப சூழலையறிந்த நெல்லை கலெக்டர் ஷில்பா, அந்த மூன்று பெண்களும், அதே பள்ளியில் தொடர்ந்து படித்திட சிறப்பு கல்வி உதவித் தொகையின் மூலம் அவர்களின் படிப்பைத் தொடர வைத்ததுடன் தொடர்புடைய பள்ளி முதல்வருடன் பேசி, அவர்களுக்கு படிப்பு முடியும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் பள்ளி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதால், அதனை பள்ளி நிர்வாகமும் ஏற்றுக் கொண்டதாம்.
தற்போது மாவட்டக் கலெக்டரின் தனிப்பட்ட பராமரிப்பிலிருக்கிறார்கள் அந்த மூன்று பெண்களும், என்று நக்கீரன் இணைய தள நிருபரிடம் தெரிவித்த கலெக்டர் ஷில்பா, வயதான அந்தப் பெண்களின் தாத்தா மற்றும் பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைப்பதற்கான உத்தரவையும் வழங்கியவர். 12ம் வகுப்பு படிக்கும் வீரலட்சுமி மெடிக்கல் கல்வி படிக்க வேண்டும் என்று சொன்னதால், அந்த மாணவிக்கு நீ்ட் தேர்வு பயிற்சி படிப்புக்கும் ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே அ.தி.முக.வின் சென்னை முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சைதை துரைசாமி அந்த மூன்று பெண்களுக்கும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்குத் தகுதியான கல்வியைப் பெறுகிற வகையிலான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக சம்பந்தப்பட்ட துறைக்குப் போன் மூலம் தெரிவித்திருக்கிறாராம். திக்கற்ற பெண்களுக்கு உதவிக்கரங்கள் நீள்வதுடன் அவர்களை வாழ்க்கையில் உயர்த்தவும் முன் வந்தது சாதாரண விஷயமல்ல.