தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா ? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டினை விசாரிக்க ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீஸ் நியமிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு தரப்பில் வழங்கபட்டதை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த கந்தகுமார் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் " துப்பாக்கி சூடு நடத்தபட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளது. அதன்படி முதலாவதாக அதிகப்படியான கூட்டத்தினை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும். அதன்பின் வாட்டர்ஜக் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உத்தியை பயன்படுத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும்.
அதன்பின் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைக்க வேண்டும்.குறிப்பிட்ட வரைமுறைகளின் படி துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்.பின்பு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அதன்பிறகே போராட்டகாரர்களின் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்துள்ளது.எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 9 பேர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்,மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கி உத்தர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
அனைத்திந்திய வழக்கறிஞர் யூனியன் பொது செயலர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் நச்சு புகையினால் அப்பகுதி மக்கள் பலர் நோயினால் பாதிக்கபட்டுள்ளனர். எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. இதில் மே 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 50 க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தினால் தூத்துக்குடி பகுதியில் இணையதள சேவை, போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கபட்டிருந்தது. தூத்துக்குடி நகரமே தீவு போல் காணப்படுகிறது.
அப்பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, போராட்டத்தில் நடத்த துப்பாக்கி சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்துள்ளது. எனவே தமிழக தலைமை செயலர்,உள்துறை செயலர்,காவல்துறை டிஜிபி, டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்,மாவட்ட எஸ்.பி.,சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 ன் படி கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த இரண்டு மனுக்கள் இன்று நீதிபதி முரளிதரன், நீதிபதி கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது " துப்பாக்கி சூட்டினை விசாரிக்க ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீஸ் நியமிக்கப்பட்டுள்ள அரசாணையை தமிழக அரசு தரப்பில் வழங்கபட்டதை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவனவா ? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாகல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.