கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - பொன்னேரி புறவழிச் சாலை வழியாக தேக்கு மரங்கள் டிராக்டரில் கடத்தப்படுவதாக விருத்தாசலம் வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு விரைந்துசென்ற வனச்சரக அலுவலர் ரவி தலைமையிலான வனத்துறை காவலர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மரங்கள் ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்திலிருந்து பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று டன் எடை கொண்ட தேக்கு மரங்களை, எழிலரசன் என்ற ஓட்டுனர் உரிய அனுமதியின்றி கொண்டு செல்வது தெரியவந்தது.
பின் வனச்சரக அதிகாரிகள், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட தேக்கு மரங்கள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து விருத்தாசலம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் டிராக்டர் வாகனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் கட்டிய பின்பு, உரிய அனுமதி பெற்ற பின்புதான் அனைத்து விதமான மரங்களையும் ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதேபோல், காட்டுக்கூடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு அனுமதியின்றி டிராக்டரில் மரங்களை ஏற்றிவந்த விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மீதும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.